இலங்கைசெய்திகள்

வவுனியா வடக்கு பிரதேசசபையை இழந்தது கூட்டமைப்பு – திருவுளச்சீட்டு மூலம் தவிசாளரானார் பார்த்தீபன்!!

Vavuniya North Pradeshiya Sabha

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டார்.

வவுனியா வடக்கு பிரதேசசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு சபையில் சர்ப்பிக்கப்பட்டு அனேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் இருதடவைகள் தோல்வியடைந்திருந்தது.

இதனையடுத்து உள்ளூராட்சி சட்டங்களின் பிரகாரம் புதிய தவிசாளரை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

குறித்த தேர்தல் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று (22) காலை வடக்கு பிரதேசசபையின் காலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் 26 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். பொதுஜனபெரமுனவின் ஒரு உறுப்பினர் சுகவீனம் காரணமாக சபைக்கு வருகைதரவில்லை.

இதன்போது சபையின் புதியதவிசாளர் ஒருவரை தெரிவுசெய்யுமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் கோரப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சோ.சத்தியேந்திரன் மற்றும் சுதந்திரக்கட்சியின் த.பார்தீபனின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

இருவர் பரிந்துரை செய்யப்பட்டமையால் தவிசாளர் தெரிவு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

வாக்கெடுப்பை பகிரங்க வாக்கெடுப்பாக நடாத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்வதா என்று ஆணையாளர் கோரியிருந்தார். இந்நிலையில் 12 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பிற்கும் 13 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துமாறும் இணக்கம் தெரிவித்தனர்.

குறிப்பாக உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பாக போட்டியிட்ட பெண் உறுப்பினர் ஒருவரும் இரகசிய வாக்கெடுப்பை கோரியிருந்தார்.

இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் தவிசாளர்களாக பரிந்துரை செய்யப்பட்ட இருவருக்கும் தலா 12 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தது. ஒரு வாக்கு எவருக்கும் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து திருவுளச்சீட்டு மூலம் தவிசாளரை தேர்வு செய்வதாக ஆணையாளர் அறிவித்தார். இதனையடுத்து சபை முன்னிலையில் இருவரது பெயரும் திருவுளச்சீட்டில் எழுதப்பட்டு தெரிவு செய்யப்பட்டது. அதன் மூலம் சுதந்திரக்கட்சியினை சேர்ந்த த.பார்தீபன் தவிசாளராக தேர்வு செய்யப்பட்டார்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button