எழுத்தாக்கம் – பிரபா அன்பு
“வெட்டுக் காயங்களில் வீச்சருவாள் பட்டது போல” வாழ்க்கையின் அடிகள் இன்னும் இன்னும் ஆழமாகிறதே தவிர குறைவதாகவில்லை…வலித்தடங்களை வருடிச் செல்வது போல இந்த எழுத்துகள் சற்று ஆறுதலைத் தருகின்றன…..மீண்டும் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்வதில் சிறு மகிழ்வு….
எனது சகோதரிபோலான ஒருவர்தான் அருள்மதி அக்கா.ஒரு நாள் தொலைபேசியில் என்னோடு கதைத்துக் கொண்டிருக்கும்போது தங்களோடு நின்று வன்னியில் பணியாற்றிய சகோதரி ஒருவரோடு என்னைப்பற்றி கதைத்ததாக கூறினார்.
‘அப்படி என்னைப்பற்றி என்ன இருவரும் கதைத்தீர்கள், யார் அவர், எனக்கு அவரை தெரியுமா’ என்று கேட்டபோதுதான் அவர் கூறிய அடையாளத்தை வைத்து கண்டு பிடித்தேன் அவர் தென்னவள் அக்கா என்று.
எனக்கு தென்னவள் அக்காவின் முகம் நினைவில் வந்து சென்றது. யுத்தம் நிறைவுற்று பல வருடங்கள் ஆகிவிட்டது.
இறுதி யுத்த காலப்பகுதியில் நாம் அனுபவித்த துன்பங்களால் இன்றுவரை எம்மால் மீண்டெழ முடியவில்லை. பல உறவுகளை இழந்தும் தொலைத்தும் அங்கங்களை இழந்தும் படுகாயங்கள் அடைந்தும் அதிலிருந்து இன்றுவரை மீண்டெழ முடியாது தவித்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள்.
எனக்கு தென்னவள் அக்காவைப் பற்றி கூறிய சகோதரி அருள்மதி அக்காவும் இறுதி யுத்தத்தில் கணவனை இழந்து விட்டார்.
இரண்டு பிள்ளைகளோடு சுயதொழிலாக கடைகளிற்கு உணவு செய்து கொடுத்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் தனது பெண் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.
இவரூடாகவே தென்னவள் அக்கா பற்றி அறிந்து கொண்டேன்.தென்னவள் அக்கா மிக சுறுசுறுப்பான ஒருவரும்கூட. அவரை நான் 2003 ம் ஆண்டு முதன் முதலாக கிளிநொச்சிப் பகுதியில் ஒரு நிகழ்வொன்றில் சந்தித்திருந்தேன்.
பல தடவைகள் அவரை சந்தித்திருக்கிறேன்.சில தருணங்களில் அவரோடு உரையாடியும் இருக்கிறேன்.
இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் கடமை அலுவல்களாக பறந்துகொண்டிருந்தார்கள்.
யாரோடும் பொறுமையாக கதைக்க முடியாத நிலை. இன்றிருப்பவர் நாளை இருப்பாரா என்று தெரியாத ஒரு சூழலாகவும் அமைந்திருந்தது.
எமது நெருங்கிய நட்புக்கள் பலரை இழந்தபடி இருந்தோம்.யாரிற்காக அழ முடியும்..?யாரை தேற்ற முடியும் என்ற நிலையில்தான் எமது நாட்களும் கடந்துகொண்டிருந்தது.
அப்படியான சூழல் அமைந்திருந்தபடியால் தென்னவள் அக்காவை வன்னிப் பகுதியில் இருக்கும்போது 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் காணவில்லை.
2009 ம் ஆண்டு யுத்தத்தில் இறந்தவர்கள்போக உயிர் தப்பியவர்கள் சரணடைந்து முகாம்களில் இருந்தார்கள்.
இந்த நிலையில் நான் இருந்த வவுனியா முகாமில் தென்னவள் அக்கா இரண்டு வருடமாக இருந்தபோதும் நான் அவரை கண்டிருக்கவில்லை.
ஒரே இடமாக இருந்தாலும் அவர் வேறொரு பகுதிக்குள் இருந்தார்.அதிகமானோர் இருந்தபடியால் அவரை என்னால் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
அதன் பின்பு நான் இரண்டு வருடங்கள் கழித்து வவுனியாவில் இருந்து எனது சொந்த இடம் வந்துவிட்டேன்.
வேலைகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை என்று என்னுடைய வாழ்கைப் பயணமும் சில வருடங்களை கடந்து சென்று கொண்டிருந்தது
இந்நிலையில்தான் அருள்மதி அக்கா இவரின் நிலைப்பாடு பற்றி கூறியிருந்தார்.
தென்னவள் அக்கா கிளிநொச்சிப் பகுதியில் நின்றபோது எரி குண்டுக்கு இலக்காகி உடல் முழுவதும் எரிகாயங்களோடு தலைமுடியும் எரிந்த நிலையில் எஞ்சிய தலைமுடி மொட்டை வழிக்கப்பட்டு நுளம்பு வலையால் மூடப்பட்டிருந்தார் என்றும் தப்ப மாட்டார் என்றே தாம் கருதியதாகவும் கூறிக் கவலைப்பட்டார்.
இச் சம்பவத்தை கேட்டதும் எனக்கு தென்னவள் அக்காவை ஒரு தடவை பார்க்க வேண்டும் போல் இருந்தது.அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று அவரைப் பற்றிய தகவல்களை கேட்டேன்.
அவர் யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதாகவும் திருமணம் ஆகாதபடியால் தனது சகோதரிகளோடும் இருக்கிறார் என்றும் அருள்மதி அக்கா கூறினார்.
உண்மையில் இச் சம்பவத்தைக் கேட்டதும் எனக்கு மிகுந்த கவலையாகவே இருந்தது.தென்னவள் அக்காவை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அருள்மதி அக்காவிடம் தென்னவள் அக்காவின் தொலைபேசி எண்ணைப் பெற்று தொடர்பு கொண்டு
என்னை அறிமுகம் செய்துவிட்டு உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். தான் அருள்மதி அக்கா வீட்டிற்கு வருவதாக கூறினார்.
அதன் பின்பு ஓரிரு நாட்கள் கழிய தென்னவள் அக்காவை சந்திக்கும் நாளும் வந்தது.மாலை நேரம் தென்னவள் அக்காவை சந்திப்பதற்காக நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
காலையில் இருந்து தொடர்ச்சியாக மழையாகவே இருந்தது.வெளியில் போனால் கட்டாயம் நனைந்துதான் வரவேணும் என்பதுபோலவே நிலைப்பாடு இருந்தது.
எப்படி அவரைப்போய் சந்திப்பது.? மழையில் நனைந்தால் அவரிற்கு என்னால நோய்கள் ஏதாவது வந்தாலும் பிறகு கஸ்ரமாக போய்விடும் என்று நினைத்தேன்.
தென்னவள் அக்காவிற்கு அழைப்பெடுத்து “அக்கா” ‘அதிகமான மழையாக உள்ளது.நீங்கள் வருவது கஸ்ரமாக இருக்கும் இன்னொருமுறை நாங்கள் சந்தித்துக் கொள்ளுவோமா?’ என்று கேட்டுக்கொண்டேன்.
நான் கூறிக்கொண்டிருக்கும்போதே மறுத்தவர் ‘இல்லை…. நான் வெளிக்கிட்டேன் நீங்கள் வாருங்கள்… நான் உங்களை கட்டாயம் சந்திக்க வேண்டும்’ என்று கூறினார்.
அவரும் என்னை சந்திப்பதற்கு மிக ஆர்வமாக இருப்பது புரிந்தது அதனால் நானும் அவரை சந்திப்பதற்குச் சென்றேன்.
அருள்மதி அக்காவின் வீட்டிற்குச் சென்றபோது தென்னவள் அக்கா அருள்மதி அக்கா அவரின் பிள்ளைகள் ஆகியோர் என்னை வரவேற்றார்கள்.அவர்களைப் பார்க்க உண்மையில் மகிழ்வாகவே இருந்தது.
தென்னவள் அக்காவும் என்னை பார்த்து சிரித்தார். பதிலுக்கு நானும் சிரித்துவிட்டு “அக்கா எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“நான் நலமாக இருக்கிறேன்.ஆனால் உங்களை எனக்கு நினைவில்லை.என்னோட நின்ற அதிகமானோரை நான் மறந்திட்டன் எரிகுண்டு பட்டதோட உடம்பெல்லாம் எரிகாயங்கள்தானே அதனால பல நோய்களும் வந்திட்டுது அதோட நோயின் தாக்கத்தால் கர்ப்பப்பையையும் மருத்துவமனையில் மருத்துவர்கள் அகற்றிவிட்டார்கள்” என்றும் கூறினார்.
‘படுகாயம் அடைந்து நடமாட முடியாது படுக்கையில் நுளம்பு வலைக்குள் இருந்தபோது தன்னோட இருந்த சகோதரிகள்தான் சகல கடமைகளும் செய்து, சாப்பாடு ஊட்டிவிட்டு உடலில் ஏற்பட்ட காயங்களினால் ஏர்ப்பாக்காது காப்பாற்றி தனக்கு உயிர் தந்ததாகவும் தான் இன்று உயிரோடு இருக்க தன்னோடு நின்ற தோழிகள்தான் காரணம்’ என்றும் கூறி மனம் நெகிழ்ந்தார்.
அவரின் மனக்கஸ்ரத்திற்கு என்னால் ஆறுதல் கூறிவிட முடியாது இருந்தது. மனமெல்லாம் வலியாகவும் வேதனையாகவும் இருந்தது.
யுத்த காலப்பகுதியில் எங்களோடு வன்னியில் இருந்த எத்தனை தோழிகள் தமக்கென்றொரு வாழ்வின்றி அரவணைக்க யாருமின்றி காயங்களோடும் மனக்கஸ்ரங்களோடும் நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.
யுத்தம் முடிவடைந்து வந்துவிட்டோம் …என்ன செய்வது …இன்னும் ஒரு சிறிய கால வாழ்க்கைதானே…அதுவும் கடந்து போய்விடும்…. என்ற எண்ணங்களோடு பல வலிகளை சுமந்தே நாட்களைக் கடத்துகிறார்கள்.
யாரை யார் நோக முடியும், யாரை யார் தேற்றுவது, என்ற நிலையில்தான் பலரின் வாழ்க்கைப் பயணமும் கடந்து கொண்டிருக்கிறது.
தென்னவள் அக்காவை எனக்கு முன்பே தெரியும் என்பதனையும் இருவரும் சந்தித்து கதைத்த இடங்களையும் கூறி ஞாபக மூட்டினேன்.
பல விடயங்களை அவரால் எரிகாயத்தினால் மீட்டுப்பார்க்க முடியவில்லை என்று கூறினார்.
முடிந்த அளவு அவரிற்கு ஆறுதல் கூறினேன்.யார் அவரை இறுதிக் காலங்களில் அரவணைக்காது விட்டாலும் முடிந்தளவு என்னால் அரவணைத்துப் பார்க்க முடியும் என்பதையும்கூறி நான் இருக்கிறேன் உங்களிற்கு ஒரு உடன் பிறப்புப்போல நீங்கள் இனி கவலைப்படக்கூடாது என்றும் கூறினேன்.
அவர் செய்துகொண்டிருக்கும் சுயதொழிலினை மேம்படுத்துவதற்கு தென்னவள் அக்காவின் நிலைப்பாட்டினை கூறி ஒரு தொகைப் பணத்தினை புலம்பெயர் சகோதரி ஒருவரிடம் பெற்றுக்கொண்டே வந்திருந்தேன்.
அவரிடம் பணத்தினை கொடுத்து தொழிலை விரிவு படுத்துமாறு கூறினேன்.
வரும் வழியெங்கிலும் எனக்கு மனம் வேதனையாகவே இருந்தது.இவர்களுக்காக என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணியவாறு வந்துகொண்டிருந்தேன். நான் எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்பதுகூட தெரியாமல் இருந்தது.
அவ்வளவிற்கு மனம் வேதனையாக இருந்தது.உண்மையில் எங்கட சகோதரிகள் கஸ்ரப்படக்கூடாது அவர்கள் கண்ணீர் சிந்தக்கூடாது.
இப்படியான இழப்புகளோடும் காயங்களோடும் அரவணைக்கவும் யாருமின்றி பல கஸ்ரங்களை சுமந்துகொண்டிருக்கும் எங்கட உடன் பிறவா சகோதரிகளை ஒன்றாக்கி சந்தோசமாக வாழ வைக்க வேண்டும் என்பதே எனது தீராத ஆசையும் கனவும்.
அதற்காக என்னால் முடிந்த வழிகளை எல்லாம் செயற்படுத்தி ஒரு அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்ற ஒரு முடிவினை எடுத்தேன்.
என் கனவு நிச்சயமாக நிறைவேறும் , எனது கனவை நான் நிறைவேற்றிக் கொள்ளுவேன்
என்ற நம்பிக்கை இருக்கிறது.
என் உடன் பிறவா சகோதரிகள் சந்தோசமாக இருக்க வேண்டும் அதற்காக என்னால் முடிந்த முயற்சிகளை எடுத்து அவர்களை ஒன்றாக்கி வாழ வைக்க வேண்டும் என்ற கனவோடு நாளைய விடியலிற்காக காத்திருக்கிறேன்…..