வெள்ளையம்மா என்றழைக்கும் வெண்ணிலவே இது உன் புலிப் பிள்ளைகளால் சூட்டப்பெற்ற திருநாமம்
கள்ளமில்லா உள்ளம் கொண்ட கறுப்புநிலா எங்கள் உள்ளமதில் நிறைந்து நிற்கும் அழகு நிலா
தமிழ்த்தாயின் தலைமகனின்
விருப்பமான தாய்மாரில்
பொறுப்பான தாயாக போர்க்களம் கழித்தாயே
தாய்க்கோழியாகி எம்மை இரையூட்டி வளர்த்தாயே
அன்னியனின் கொடும்படைகள்
அங்குலத்திற்கொன்றாக
அகலக்கால் பதித்து எங்கள்
அன்புக்குழந்தைகளை பசிக்கொடுமைக்காளாக்கி
காட்டினிலும் மேட்டினிலும்
கட்டாந்தரைகளிலும்
ஓடி மறைந்து நின்றும்
உயிர்தாயின் மண்
விடுதலையே பெரிதென்று போர்தொடுத்து நின்ற
புனிதத்தெய்வங்களின்
பசிதீர்த்த தாயம்மா
பாரதத்தின் படைகளின்
பார்வையிலே மண்தூவி
தாயகத்து காவலரின்
பசிதாகம் தீர்த்து வைத்து
தாயாகி நின்று எம் தலை தடவி
அரவணைத்தாய்
தாயாகி தந்தையாகி
தலைவணங்கும் அண்ணனாகி
போர்ப்படையின் தளபதியாய்
பொறுப்புமிக்க தலைவனுமாய்
எம்மையெல்லாம் வாழவைத்து
இன்னுயிரைக் கொடுத்து இன்று
தமிழ்பேசும் நெஞ்சங்களில் ஒளிவீசும் திருவிளக்கின்
பார்வையிலும்
பொறுப்புமிகு தாயாகி
பசுமரத்தாணி போல
போராட்ட வாழ்வதனில்
பதிந்து விட்ட தாயம்மா
தேசத்தலைவன்
உனை அழைத்து பாசத்துடன் பேசியதும் நீ பெற்ற பெரும் பேறம்மா
வெள்ளையம்மா வருவா என்று
வழிமேலே பொறிவைத்து
வஞ்சகப் படை காத்திருக்க கனகம்மா என்ற எங்கள்
கறுப்பு நிலா
பயமின்றி பதற்றமின்றி
தேசக் கவலரின் பசிதீர்த்து
மனமகிழ்ந்து நின்றதனை
பாரினிலே யார் மறப்பார்
பெற்றவர்கள் முகங்காண
முடியாத சூழலிலே
மட்டு நகர் திருமலையின்
மைந்தர்கள் களப்பணியில்
இருப்பதனை நீ அறிந்தால்
இருமடங்கு கரிசனையாய்
அன்போடு அரவனைத்து
அறுசுவை உணவளித்த அட்சய பாத்திரமே அன்பான தாயே உன்
அரும்பாதம் பணிகின்றோம்
தென்மராட்சி மண்னின்
தேசப்புதல்வன்
மட்டுவில் மண்ணின்
மணி மகுடமவன்
குட்டித் தினேஷ் என்றவனாக
ஓடித்திரிந்த எங்கள் செல்லப்பிள்ளை
தன்பணியில் நேர்த்தியாய்
தமிழ்ச்செல்வனாகி
தலைமகனின் மனம் பதிந்த தளபதியான
பிரிகேடியர் உன்பிள்ளை
கொடும் படைகளின் குண்டுக்கிரையாகி எமைப்பிரிந்த எங்கள் அன்புத்தம்பி
புன்னகை அரசன்
உந்தன் செல்லப்பிள்ளையம்மா
உன்னப்பற்றி அவனும்
அவனைப்பற்றி நீயும் வாயாரப் புகழ்வதும்
வாடிக்கையான செயல் அம்மா
சுற்றிவளைப்பினலே
சுடர் மறவர்கள் உன் வீட்டில்
உயிர் விட கழுத்து மாலைதனை
கடித்திடத் துணிகையிலே
சற்றும் தாமதிக்காது
ஆயுதங்களை பறித்தெடுத்து
பக்குவமா மறைத்து வைத்து
வீரமுடன் உயிர்காத்த வீரத்
தமிழ்மானத்தாயம்மா
மாவீரர் பட்டியலில்
நாட்டுப்பற்றாளரென்றோ மதிப்பளிக்க வேண்டியவர் நீங்களம்மா
என்ன செய்வேன் தாயே
தேசமது இன்றிருக்கும் திக்கற்ற சூழலிலே வாய்திறந்து தான் பேச வலிமையில்லை வலிமையில்லை
எந்தனுக்கு ஊமை கண்ட கனவதுபோல் உள்ளுக்குள்ளே பொருமுகின்றேன்
இறைவன் திருவடியில் இளைபாற வேண்டியுமே இம்மடலை நிறைவு செய்கின்றேன் என் தாயே!!!