இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவு தினம் இன்று

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின்(Mayilvaganam Nimalarajan) 21வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில்  ஊடக அமையத்தில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு,  சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிர்நீர்த்த ஊடகவியலாளருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளர் பு.சசிகரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

2000ஆம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் நாள் இரவு யாழ். குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிமலராஜன், தான் பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகங்களிற்கு செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த போதே சுடப்பட்டிருந்தார் என்பதுடன்  அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும் இதன் போது படுகாயம் அடைந்தனர்.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில், பிபிசி தமிழோசை, அதன் சிங்கள சேவையான சந்தேசிய உள்ளிட்ட வானொலிகள், நாளிதழ்கள், ராவய உள்ளிட்ட தமிழ், சிங்கள வார இதழ்களென அவர் பணியாற்றிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Gallery

Related Articles

Leave a Reply

Back to top button