கதைமுத்தமிழ் அரங்கம்.

நல்லது செய்தால் – நல்லதே நடக்கும்!!(அற்புதமானதோர் உண்மைச் சம்பவம்)

Alexander Fleming

பிளமிங்…ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஏழை விவசாயி. கடுமையான கஷ்டத்தில் இருந்தும் தன்னைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. ஆனால் தனது சிறு வயது மகனின் எதிர்காலம் அவனது படிப்பு பற்றியெல்லாம் கடுமையாக யோசித்தார்.

ஒரு நாள் பிளமிங் மேய்ச்சல் பகுதியில் நடந்து கொண்டிருக்கையில் திடீரென உயர்ந்த சத்தமொன்று கேட்டது. சத்தம் வந்த திசையில் சென்ற பிளமிங் அங்கு சிறுவனொருவன் சேற்றில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டு வேகமாக செயல்பட்டு அச்சிறுவனை பாதுகாப்பாக மீட்டெடுத்தார்.

அடுத்த நாள் உயர் ரக குதிரை வண்டியில் இரு காவலாளிகளுடன் பணக்கார வாசனை மிகுந்த மனிதரொருவர் வருகை தந்தார்.
செல்வமும் செல்வாக்கும் மிக்க மனிதரொருவர் இந்த ஏழையின் எளிமையான வீட்டைத் தேடி வந்திருப்பதைக் கண்ட பிளமிங் ஆச்சரியப்பட்டார்.
என்றாலும் தான் நேற்று காப்பாற்றிய சிறுவனின் தந்தைதான் அவரென்பதை சற்று நேரத்தில் ஊகித்துக் கொண்டார்.

வந்தவர்:” உனக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கூறினாலும் போதாது. நான் உன் முன்னிலையில் கடனாளியாக இருக்கின்றேன். உனக்கு வேண்டியதைக் கேள்” என்று நன்றியுடன் கூறினார்.

அதற்கு பிளமிங்: ” நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. உங்கள் மகன் என் மகனைப் போன்றவன். நேற்று உங்கள் மகனுக்கு ஏற்பட்டது நாளை என் மகனுக்கு ஏற்படலாமல்லவா” என்றார்.
அப்போது வந்த மனிதர்:” என் மகனை நீ உன் மகன்போல் கருதுவதால் உன் மகனை நான் கூட்டிச் செல்கிறேன். அவன் பெரிய அந்தஸ்தை அடையும் வரை அவனை எனது செலவில் படிக்க வைக்கின்றேன்” என்றார்.

பிளமிங்கால் நடப்பவற்றை நம்ப முடியவில்லை. என் மகன் பெரும்பெரும் பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் இடத்தில் படிக்கப் போகின்றானா என்று மனதுக்குள் சந்தோஷமாக கூறிக் கொண்டார்.
பின்னர் ஒரு காலத்தில் அந்த ஏழை மாணவன் செயின்ட் மேரி மருத்துவக் கல்லூரியில் வைத்தியராக பட்டம் பெற்று வெளியானார்.
பட்டம் பெற்றது மட்டுமல்ல மிகப்பெரும் அறிஞராக உருவெடுத்தார். அவர்தான் சேர் அலெக்ஸாண்டர் பிளமிங்…
மனித இனம் கண்ட முதலாவது அன்டிபயடிக் மருந்தான பெனிசிலினை 1929ல் கண்டுபிடித்தவர்.
1945 ல் நோபல் பரிசைப் பெற்றவர்…

இன்னும் முடியவில்லை.
தன்னைப் படிக்க வைத்த அந்த பணக்கார பெருந்தகையின் மகன் நிமோனியாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது அவருக்கு பெனிசிலின் மூலம் வைத்தியம் செய்து காப்பாற்றினார்…

நிமோனியாவில் இருந்து காப்பாற்றிய அந்த பணக்காரரின் மகன் வேறு யாருமல்ல…
பிரித்தானியா கண்ட பிரபல முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலேதான்.
அவரது தந்தை ரண்டோல்ப் சர்ச்சில்தான் சேர் அலெக்ஸாண்டர் பிளமிங்கை படிக்க வைத்து ஆளாக்கியவர்…

சேற்றில் இருந்து காப்பாற்றப்பட்ட சிறுவன் பிரதமராகின்றார்…
உண்ணவே வழியில்லாத ஏழையின் மகன் பெரும் வைத்தியராகின்றார்…
நல்லவர்கள் உதவிகள் செய்து காட்டிய ஆச்சர்யமான விடயங்களே இவை…

எங்கிருந்தாலும் நல்லதைச் செய். எப்போதாவது அதன் பலனை அறுவடை செய்வாய்.

உண்மையில் இலட்சியத்தை அடையும்போது கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லும் ஆயிரம் கைகளைவிட கஷ்டம் தடுமாற்றத்தின் போது தூக்கிவிடும் ஒரேயொரு கை சிறந்ததுதான்…

Related Articles

Leave a Reply

Back to top button