புதுமையின் தடம்பதித்து எமக்கென்று ஒரு பாதை…….

அன்புசார் உறவுகள், வாசகப்பெருமக்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கங்கள்!!

நீதியையும் தருமத்தையும் நிலைநாட்டுவதற்காகவும் உரிமைகளையும் உண்மைகளையும் பாதுகாப்பதற்காகவும் செந்நெறிகளை உரத்துச் சொல்வதற்காகவும் உயிர்துறந்த அத்தனை பேருக்கும் எமது சிரம் தாழ்ந்த அஞ்சலிகளைச் செலுத்தி எமது பயணத்தின் முதல் அடியை எடுத்துவைக்கின்றோம். 

முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியுமானது தமிழ் மொழி. இன்று உலகை ஆளும் மிக முக்கிய விடயம் தகவல் தொழிநுட்பமே. ஐவின்ஸ் தமிழ் என்ற பெயரை நாம் தெரிவுசெய்ய  தகவல் தொழிநுட்பம் மூலமாக தமிழ்மொழி பேசுவோரின்  அறிவாற்றலை தகவல் அறியும் திறனை கலை கலாசார விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கமே காரணமாகும். 

எம் மொழியின் சிறப்பை தனித்துவத்தை உலகறியச்  சொல்வதோடு  எம் இளம் சந்ததி தமிழின் ஆழ அகலங்களைப் புரிந்துகொள்ளவும் நாம் முனைப்புடன் செயற்படவுள்ளோம். அன்றாட உலகியல் விடயங்களை தமிழ்சார்ந்து அணுகும் தனித்துவம் மிக்க சிறந்த  தளமாக ஐவின்ஸ் மிளிரும் என்பதில் ஐயமில்லை. 

தனித்துவம் என்பது நம்மைப் புரிந்துகொள்வதற்கான நமது பயணம். இந்தப் பயணம்  தமிழர் தேசியம் சார்ந்த அரசியல் பார்வையை உண்மையோடும் உறுதியோடும்  முன்னெடுக்கும்.  ஊடகப் பணி என்பது ஜனநாயகத்தின் நேர்த்திக்கு மிக அவசியமாகும். தமிழர் சமூகத்தின் சிந்திக்கும் திறனை மேலும் விரிவுபடுத்தி ஒடுக்கப்பட்டோருக்காக  ஒன்றுபட்டு நிற்பது எமது தலையாய கடமை என எண்ணுகின்றோம்.

கலை, பொருளாதாரம், பண்பாடு, சமையல், ஆரோக்கியம், அறிவியல், மருத்துவம்  எனப் பல துறைகளை நாம் முன்னெடுத்தாலும் அறிவியல் -அரசியல் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் எடுப்போம்  எனவும் பரந்து வாழும் தமிழ்ச்  சமூகத்தின் எண்ணக் குவிப்புகளை மன அபிலாசைகளை  வெளிப்படுத்த சிறந்த தளமாக இருப்போம் எனவும் ஐவின்ஸ் உறுதியாக கூறிக்கொள்கிறது. 

எழுத்துச் சுதந்திரம் சுருங்கி வரும் இக்காலத்தில் பல உண்மைகள் வெளிவராமலும் போய்விடுகிறது.  இளையோர் பல கவனச்சிதறல்களுக்கு  உட்பட்டு தேடல்களைக் குறைத்து அறிவுத்திறனை வளர்ப்பதில் அலட்சியம் காட்டும் சமகாலத்தில் அறிவுப்பசிக்கும் அரசியல் வேட்கைக்கும் நாம் பதில் தர காத்திருக்கிறோம். 

“சிந்தனைகளைச் செதுக்கினாலே சிற்பங்களை  உருவாக்கமுடியும்”. இவ் எண்ணப்பாட்டில் ஐவின்ஸ் முழுக்கவனத்துடன் செயற்படும். சுதந்திரமான எழுத்தே செறிவுமிக்க படைப்புகளைப் பிரசவிக்கும். அந்த வகையில் பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் மாற்றங்களுக்காக கைகோர்க்கும் நல் உறவுகளை நாம் வரவேற்கின்றோம். 

சிறந்த இதழியலின் பின்னால் அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் உள்ளது.  ஊடகவியலாளர்களும் கருத்துருவாக்க கர்த்தாக்களும் தொடர்ந்து செயற்படவேண்டும் என்றால் எமது மக்கள் பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் என இந்நாளில் தமிழ் மக்களாகிய உங்களிடம் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம். 

அன்பு வாசகர்களே உங்கள் பகுதியில் அல்லது பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் உலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் எனின் எம்முடன் தொடர்பு கொண்டு  எமது இணையத்தளத்திற்கோ அல்லது எமது வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அனுப்பிவைத்தால் ஐவின்ஸ் தமிழ்  தளத்தில் பதிவிடுவோம். ஊடகப்பணி செய்ய இணைந்து கைகோர்ப்போம் வாரீர்….

நன்றி….

ஈமெயில் – [email protected]

வட்ஸ்அப் இலக்கம் – +41 77 942 79 71

ஆசிரியர்

ஐவின்ஸ்தமிழ் .கொம்

Leave a Reply

Back to top button