
தொடரூந்துப் பயணத்தில் சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதாய் யாழ் தேவியில் வடக்கு நோக்கி வருகை தரும் அன்பான சிங்களச் சகோதரர்களே! மீளவும் ஒரு தரம் சிந்தியுங்கள்!
கடந்த 77 வருடங்களாக புதைக்கப்படும் சகோதரர்களாக நாங்களும் அதை நியாயப்படுத்தும் சகோதரர்களாக நீங்களும் சகோதரத்துவம் பற்றி நிறையவே பேசியுள்ளோம். ஆனால் தொன்று தொட்டு சகோதரத்துவத்தை பேசிக்கொண்டே இன்றுரை சகோதரர்களை புதைத்தும் வருகிறீர்கள்.
எங்களைச் சகோதரர்கள் என்கிறீர்கள். அப்படியானால் என் அப்பனும் ஆத்தாளும் அண்ணனும் அக்காவும் தம்பியும் தங்கையுமாய் நாங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது உங்கள் அப்பனும் ஆத்தாளும் அண்ணனும் அக்காவும் தம்பியும் தங்கையும் இங்கேயே தான் இருந்தார்களே?
ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் கடந்த காலத்தில் நிகழ்ந்தவை மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதாக சொல்லிக் கொண்டீர்கள். ஆனால் இன்னும் இன்னும் நாங்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். கடந்த காலத்தை எங்களிடம் மறக்கச் சொல்லுகிறீர்கள். கடந்த காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் ‘மீள நிகழாமை’ மட்டும் நிகழாதிருக்க ஏனையவை அனைத்தும் மீளவும் மீளவும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
ஆட்சியும் அதிகாரமும் உங்களிடமே சிறைப்பட்டுள்ளபோது நீங்கள் சிங்களவர்களாய் இருந்து கொண்டு எங்களைத் தமிழர்களாக இருக்க வேண்டாம் என்கிறீர்கள். எங்கள் இலட்சியங்களையும் அடையாளங்களையும் இழப்புகளையும் வலிகளையும் மறந்துவிடச் சொல்கிறீர்கள்.
எம் இனத்துத் தலைவன் ‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன் ;வரலாறு எனது வழிகாட்டி’ என எமக்கு வழிகாட்டி உள்ளான்.
இழந்த இறைமையையும் மறைக்கப்பட்ட வரலாற்றையும் மறந்து விடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. நீங்கள் புனையப்பட்ட மகாவம்ச வரலாற்றை மறந்து விடுங்கள்.
1983 ஆடிக் கலவரத்தை மறந்து விடுவதற்கு அன்று நீங்கள் தமிழனுக்கு என்ன தேன் நிலவா நடத்தி இருந்தீர்கள்? தமிழன் என்ற ஒரே காரணத்திற்காய் குற்றுயிரும் குலைஉயிருமாய் நடுவீதிகளில் போட்டு எரிக்கப்பட்டோம்.
- ஏறத்தாழ 5638 உயிரிழப்புக்கள்.
- ஏறத்தாழ 150,000 தமிழர்கள் வீடு
வாசல்களை இழந்தனர். - இனச்சுத்திகரிப்பினால் 100,000.
தமிழர்கள் நாட்டை விட்டு
வெளியேற்றப்பட்டனர். - 18,000 தமிழர்களின் வீடுகள் முற்றாக
எரிக்கப்பட்டன
. - 5000 தமிழர்களின் வியாபார
நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. - நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள்
பாலியல் வல்லுறவுக்கு
உள்ளாக்கப்பட்டனர். - 37 தமிழ் அரசியல் கைதிகள்
சிறைச்சாலைகளில் வைத்து
படுகொலை செய்யப்பட்டனர். - மொத்த பொருளாதார இழப்பு $300
மில்லியன்.
இவற்றைவிட முன்னும் பின்னும் இன்னும் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் எங்கள் நினைவுகளில் ஆறாத வடுக்களாய்.
உங்களது கடந்த காலத்தை மறக்காதிருப்பது எங்களது நிகழ்கால இருப்புக்கு அவசியமாகிறது. எங்களது கடந்த காலத்தை மறக்கச்செய்வது உங்களது நிகழ்கால இருப்புக்கு அவசியமாகிறது.
நாட்டின் எல்லைகள் உனக்கானதாய் மட்டும் உள்ளவரை எனக்கானதாய் என் நாட்டின் எல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். உனது ஆக்கிரமிப்பு என் எல்லைகளாயும் ஆட்கொலைகள் எனது பிள்ளைகளாயும் இருக்கும்போது நான் மறந்து விடுவதற்கு எதுவுமே இல்லை.
என் அடையாளத்தை தொலைத்து உன் அடையாளத்துள் கலந்து என்னைச் சகோதரன் ஆகிவிடு என்கிறாய். உனக்குள் நான் அழிவதும் எனக்குள் நீ கலப்பதும் அல்ல சகோதரத்துவம். எனதும் உனதுமான தனித்துவ அடையாளங்களுடன் நான் – நானாகவும், நீ – நீயாகவும் இருத்தலில் நான் உனக்குமாய் நீ எனக்குமாய் எழுதலே சகோதரத்துவம்.
-:நடராஜர் காண்டீபன்:-